தமிழின் உயிர் எழுத்துக்களில் முதலாகி, மெய் எழுத்துக்களில் இடையாகி, உயிர்மெய் எழுத்துக்களில் கடை ஆகி முற்று பெற்று வரும் பெயர் கொண்ட அற்புத பிறவி “அம்மா”. இந்த மூன்றெழுத்து ஒற்றைச் சொல்லை உச்சரிக்கும் போது உடல் சிலிர்ப்பதை உணராதவர் உலகில் ஒருவரும் இல்லை. அம்மா என்றால் அன்பு, கருணை, இனிமை தோன்றும். அப்படிப்பட்ட அன்னையைக் கொண்டாடவே உலக அன்னையர் தினம் 1908இல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. தாயைக் கொண்டாட ஒரு நாள் போதுமா என்றால், நிச்சயம் போதாது! தினம் தினம் கொண்டாட வேண்டிய தெய்வம் அவள்.
தாய்மை என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்றும் தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்றும் அன்னைதான் இவ்வுலகின் முதல் கடவுள் என்றும் நம் பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன. அன்னையர் தினத்தை உலகம் கொண்டாடுவதற்கு முன்பே நமது முன்னோர்கள் நாட்டினையே தாய்நாடு என்று, மொழியை தாய்மொழி என்றும் பெருமைபடுத்தியுள்ளனர்.
ஒரு குழந்தை பிறப்பது ஒரு தாய் மூலமே. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அத்தனை உறவுகளினதும் ஆத்மார்த்தமான அன்பை ஒருமிக்கச் செய்து அன்பின் உச்சநிலையைக் காட்டுவது தாயன்பு மட்டுமே. சுயநலம் பாராத, தன் நலம் கருதாத ஓர் உயிர் அம்மா மட்டுமே.
இவ்வுலகில் நாம் எந்த ஒரு காலகட்டத்திலும் சரி எத்தனை மனிதர்களைச் சந்தித்து இருந்தாலும் சரி நம் தாய் போல் நம்மை யாரும் நேசித்திருக்க முடியாது. ‘எந்தக் குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னைதான்.
ஓராண்டு காலமாக பெருந்தொற்றால் உலகமே வாடிய காலத்திலும், வீட்டில் இருபத்து நான்கு மணிநேரமும் தன் குழந்தைகளுக்காக, தன் கணவருக்காக, தன் குடும்பத்திற்காக பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு பாராட்டுகளும், நன்றிகளும் தெரிவிக்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்!
இந்தப் பெருந்தொற்று காலத்தில், வீட்டில் குழந்தையை விட்டுவிட்டு, மருத்துவர்களாகவும், செவிலியர்களாகவும், சுகாதார உதவியாளர்களாகவும், காவலர்களாகவும், இதர துப்புரவுப் பணியாளர்களாகவும், மற்றைய அலுவலகத்தில் பணிபுரியும் அன்னையர் ஒவ்வொருவரையும் ஒட்டுமொத்தத்தினரையும் கொண்டாட ராகாவின் அன்னையர் தின வாழ்த்துகள்! தாயை வணங்குவோம், தாய்மையைப் போற்றுவோம்!
Filled Under :
*We reserve the right to delete comments that contain inappropriate content.