நாம் அனைவரும் சிரிக்கிறோம். சிலர் மற்றவர்களைவிட அதிகமாக சிரிக்கக்கூடும். ஆனால், அது ஒருமித்த மனித பண்பு. அகில உலகத்துக்கும் பொதுவான மொழி சிரிப்பு. உண்மையில், சிரிப்புக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை!

சிரிப்பின் சிறப்புகளை கூறுகையில் ‘அழகின் சிரிப்பு’ என்றார் பாரதிதாசன். ‘துன்பம் வரும் வேளையில் சிரிங்க...” என்றார் வள்ளுவர். ‘சிரித்து வாழ வேண்டும்; பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே” என்றார் பாடலாசிரியர் புலமைபித்தன். ‘சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி’ என்றார் கவிஞர் கண்ணதாசன்.

உன் சிரிப்பின் நீளம் எவ்வளவோ அந்தளவு உன் ஆயுளின் நீளம் என்பார்கள். ஆம்! மகிழ்ச்சியை மட்டுமின்றி ஆரோக்கியத்தையும் இலவச இணைப்பாகத் தருவது சிரிப்பு. மனிதனுக்குச் செலவில்லா எளிய மருந்து சிரிப்பு. சிரிக்கும்போது மனதில் ஒருவித மகிழ்ச்சியான கலகலப்பான உணர்ச்சி ஏற்படுகிறது. சிரிக்கும்போது மூளையில் அதிக எண்டோர்ஃபின் (endorphin) சுரக்கிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து சுறுசுறுப்பை அதிகரிக்கும். மேலும், சிரிப்பு உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. சிரிக்கும்போது, உடலில் ஜீர்ணிக்கும் நீர் சுரக்கிறது. இதனால், உணவு எளிதாக ஜீரணமாகிறது.
அதுமட்டுமில்லாமல், சிரிக்கும்போது முகத்தின் தசை நார்களுக்குப் பயிற்சி கிடைக்கிறது. இது முகத்தின் அழகு அதிகரிக்க காரணமாகிறது. நன்றாக சிரித்து கலகலப்பாக இருப்பவர்களுக்கு உடலில் கொழுப்பு சேராது. நீண்ட சிரிப்பு, உடலில் உள்ள அதிக கலோரிகளை எரிக்கப் பயன்படுகிறது. பிரச்சனைகளை எளிதாக சிரித்துக் கொண்டே எதிர்கொண்டால் இருதயமும் மகிழ்ச்சியாக இருக்குமாம். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று நம் முன்னோர்களும் சொன்னதுண்டு.

குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கிறார்கள். ஆனால், பெரியவர்களோ ஒரு நாளைக்கு 15 முறைதான் சிரிக்கிறார்கள் என ஆய்வு கூறுகிறது. உடலும் மனமும் இனிதாக இப்போதே சிரிக்கத் தொடங்குங்கள். சிரிப்பு வரவில்லையா? நல்ல நகைச்சுவை துணுக்குகளைப் படியுங்கள் அல்லது நகைச்சுவை வீடியோக்களைப் பார்த்தால் சிரிப்பு தானா வரும்.
Filled Under :
*We reserve the right to delete comments that contain inappropriate content.