சர்வதேச அளவில் பிப்ரவரி 21-ஆம் தேதி உலகத் தாய்மொழி தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலகின் மொழி மற்றும் கலாச்சார வேற்றுமைகளைக் கொண்டாடும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
நம் மனத்தின் உள்ளே, ஏதாவது ஒன்றைப் பற்றிச் சிந்திப்பதும் மொழியின் ஒரு நிலை ஆகும். பலர் சேர்ந்து ஓர் இனமாக வாழ்கிறார்கள் என்பதற்கு அவர்களின் நிறமோ, பழக்க வழக்கங்களோ காரணமில்லை; அவர்கள் ஒருமொழி பேசுவோராக இருப்பதுதான் காரணமாகும் என்பர். எனவே, மொழி என்பது ஓர் இனத்தின் புற அடையாளம் எனலாம்.
உலகில் ஏழாயிரம் மொழிகள் இருந்தாலும் மூவாயிரம் ஆண்டுகள் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட மொழிகள் ஏழு மொழிகள் தான், அதில் தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழி எனும் சிறப்பிடம் பெறுகிறது. மலையாளம், தெலுங்கு, துளு, கன்னடம் போன்ற மொழிகளின் தாயாக அமையும் தமிழ், என்று பிறந்த மொழி என சொல்லமுடியா அளவு தொன்மையும் தொடர்ச்சியும் கொண்டது.
அகரம் கற்றுத் தந்தபோதே அறத்தைக் கற்றுத் தந்த மொழி நம்மருமைத் தமிழ்மொழி. தமிழ் என்றால் இனிமை! தமிழ் என்றால் அழகு! தமிழ் என்றால் செம்மொழி எனும் பொருள் உண்டு. அத்தனை பெருமை கொண்ட தமிழ் மொழியின் தொடர்ச்சி மக்கள் பயன்பாட்டில் தான் உள்ளது. ஆகவே, அன்றாட வாழ்வில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவோம்.
தேந்தமிழென்றும், இன்பத்தமிழென்றும், அன்னைத் தமிழென்றும், அருந்தமிழென்றும், ஞானத் தமிழென்றும், தீந்தமிழென்றும் போற்றப்படும் நம் அன்புத் தமிழைக் கற்றால் துன்பங்கள் நீங்கும், சுகம் வரும், நெஞ்சில் தூய்மை உண்டாகிவிடும்! வீரம் வரும்! என்று பாவேந்தர் கூறியது நடந்தே தீரும். அன்னைத் தமிழை நேசிப்போம், அருந்தமிழ் மொழியைச் சுவாசிப்போம். தித்திக்கும் செந்தமிழை எத்திக்கும் பரப்புவோம்! அனைவருக்கும் ராகாவின் உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள்.
Filled Under :
*We reserve the right to delete comments that contain inappropriate content.