மலேசிய தினம் (செப்டம்பர் 16) என்பது மலேசிய நாடு உருவான தினமாகும். 1963-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் மெர்டேக்கா சதுக்கத்தில் தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹமான் ‘புதிய மலேசியா’வைப் பிரகடனப்படுத்தினார். அந்த அடிப்படையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 16ஆம் நாள் மலேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மலேசியர்கள் என்பதுதான் நமது அடையாளம். மொழி, மதம், சமயம், கலாச்சாரம், பண்பாடு என நாம் வேறுபட்டிருந்தாலும் ஒற்றுமை என்ற ஒற்றைச் சொல்லில் அனைவரும் மலேசியர்களாக இணைந்துள்ளோம்.
மலேசியா என்றால் பல்லின மக்கள், பல்வகை கலாச்சாரங்கள், வெவ்வேறு சமயங்கள், நாவில் சுவையூறும் உணவுகள் என பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். மலாய்க்காரர்களின் உணவில் இந்தியர்களின் கலவை இருப்பதும், இந்தியர்களின் உணவில் சீனர்களின் கலவை இருப்பதும் இங்கு வழக்கமான ஒன்றாகும். மலேசியாவில் இந்தியர்களை தவிர சீனர்களும் மலாய்காரர்களும் வாழை இலையில் உணவு உண்பது உண்டு. உணவு மட்டுமின்றி உடை, மொழி, பாவனை என எல்லாவற்றிலும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகப் பின்னி பிணைந்துள்ளோம்.
தமிழுக்கு சிறப்பு ழகரம் என்பது போல் மலேசியர்களின் பேச்சு மொழிக்கு சிறப்பு லகரம்! நம் அன்றாட பேச்சு வழக்கில் இன்றியமையாத ஒரு சொல் ல (lah)! அதோடு, மலேசியர்கள் பேசும் போது பெரும்பான்மையான மொழி கலவையும் அதில் இடம்பெறும். உதாரணத்திற்கு, அண்ணே, மீ கோரேங்க் சத்து தாபௌ! இதில், தமிழ், மலாய், சீனம் என மூன்று மொழிகளும் இடம்பெற்றுள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்களே மலேசியர்கள்.
பல்வேறு கலாச்சாரத்தின் தொகுப்பாக மலேசியா அமைந்துள்ளதே அதன் வலிமை ஆகும். நாம் மலேசியர்கள் என்பதில் பெருமை கொள்வோம்! சர்வதேச தொற்று நோய் பரவலின் தாக்கத்திலிருந்து அனைவரும் ஒன்றாக மீண்டெழுவோம்!
Filled Under :
*We reserve the right to delete comments that contain inappropriate content.