சிறுவயது முதலே கவிப்புலமை பெற்று விளங்கியவர் பாரதியார். இவர் ஒரு எழுத்தாளர், கவிஞர், பத்திரிக்கையாசிரியர், சுதந்திர போராட்ட வீரர் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். இவரது பாடல்களில் பெண் விடுதலை, நாட்டுப்பற்று, மற்றும் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் மேலோங்கி இருக்கும். இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
விளங்குகின்ற தமிழ்மொழியை மண்ணில் நட்டு, விளங்குகின்ற புதுவிதியை மலர் வைத்தோன் பாரதி. எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய பாடல்கள் மற்றும் கவிதைகள் வழி தமிழ்ச் சுவையை ஊட்டியவர் பாரதி. மகா கவியின் எழுத்தூற்றுக்குப் பொருள் விளக்கம் தேவையில்லை, இருப்பினும் பொருள் உணர்ந்து ரசிக்க, ரசனையில் சில விளக்கத் துளிகள்.
“சின்னஞ் சிறுகிளியே – கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே – உலகில்
ஏற்றம் புரியவந்தாய்!”
என் செல்லமான கிளியே (கண்ணம்மா), என்னுடைய எல்லாச் செல்வங்களுக்கும் களஞ்சியமே, என் துன்பங்கள் அனைத்தையும் தீர்த்து என் வாழ்வில் செழுமை புகத்த வந்தாயே கண்ணம்மா.
பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா!
பேசும்பொற் சித்திரமே!
அள்ளியணைத்திடவே – என் முன்னே
ஆடிவருந் தேனே!
அமுதே, கனியே என் கண்ணம்மா, தங்கச் சித்திரம் போல் என் முன்னே பேசி சிரிக்கும் அழகே, உன்னை அள்ளி அணைக்கும் பொழுதிலே தேன் போலே இன்பம் பொங்கி வருகிறதே கண்ணம்மா.
ஓடி வருகையிலே – கண்ணம்மா!
உள்ளங் குளிரு தடீ;
ஆடித்திரிதல் கண்டால் – உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ.
நீ என்னை நோக்கி ஓடி வருகையில் என் உள்ளம் குளிர்ந்து போகிறதே கண்ணம்மா, நீ அங்குமிங்கும் ஓடி ஆடி விளையாடுவதை பார்க்கும் வேளையில் என்னுடல் ஆவியும் ஓடி வந்து உன்னை தழுவிக்கொள்ள பேராசை கொள்கிறதே கண்ணம்மா.
உச்சிதனை முகந்தால் – கருவம்
ஓங்கி வளருதடீ;
மெச்சியுனையூரார் – புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ.
தந்தையென நானும் உன் உச்சி முகர்ந்து பார்க்கையிலே எனக்குள் கர்வம் எல்லையில்லாமல் வளர்ந்து நிற்குதடி, உன்னை புகழ்ந்து ஊர் மக்கள் பேசுவதை என் செவிகள் கேட்கும் பொழுது என் உடல் சிலிரிக்கிறது என் செல்லமே.
கன்னத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ;
உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா!
உன்மத்த மாகுதடீ.
என் கன்னத்தில் நீ முத்தமிட்டால், உள்ளம் கள் (மது) குடித்தது போல் பேரின்ப வெறி கொள்கிறது. உன்னை அரவணைக்கையிலே நானும் மயக்கம் கொண்டேனடி கண்ணம்மா.
உன் கண்ணில் நீர்வழிந்தால் – என்நெஞ்சில்
உதிரங் கொட்டுதடீ;
என்கண்ணில் பாவையன்றோ? – கண்ணம்மா
என்னுயிர் நின்ன தன்றோ?
என் கண்ணே, உன் கண்ணில் கண்ணீர் வரும் நிலையை நான் காண நேர்ந்தாலும் அது என் இதயத்தில் இருந்து கொட்டும் ரத்தம் ஆகாதோ? என் இமைகளுக்குள் வாழும் அழகுப் பதுமையே (பொம்மை) நான் வாழும் வாழ்க்கையும் எனது உயிரும் உனக்கானதன்றோ!
பாரதியாரின் பாடல்களில் அவருடைய கவிதை உள்ளம் எப்படி அழகாக மலர்ந்திருக்கிறது என்பதற்கு மேல் இருக்கும் வரிகள் உதாரணமாகும்.
Filled Under :
*We reserve the right to delete comments that contain inappropriate content.