← Back to list
புகைப்படத் துறை: ஒரு ‘க்ளிக்’ ஓராயிரம் ‘லைக்’!
May 18, 2020
COVID-19 கோறனி நச்சில் தொற்றை அடுத்து அமுலுக்கு வந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பல துறைகளில், புகைப்படத் துறையும் ஒன்று!
குறிப்பாக முழு நேரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த சில புகைப்படத் துறைக் கலைஞர்கள், தங்களது தொழிலை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக, மலேசிய இந்திய திருமண புகைப்படக்காரர்கள் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் MIWPV-வின் ஊடக இயக்குநர் விக்னேஸ்வரன் ராகா செய்தியிடம் தெரிவித்தார்.
MIWPV-வின் ஊடக இயக்குநர் விக்னேஸ்வரன்
அத்துறைச் சார்ந்த பாதிப்புகள் குறித்து விக்னேஸ்வரன் இவ்வாறு கூறுகின்றார்.
“ஒரு மாதத்திற்கு குறைந்தது 5 நிகழ்ச்சிகளை கையாளும் நிறுவனங்கள், ஆறு மாதக் காலத்திற்கு ஏறக்குறைய 30 நிகழ்ச்சிகளை இழக்கின்றன. அவர்களது சூழ்நிலையின் பாதிப்பு பலமாக உள்ளது என்பதையே இது காட்டுகின்றது. நான் சொல்றது சிறு நிறுவனங்கள். சில பெரிய நிறுவனங்கள், புகைப்படம் தவிர்த்து, வீடியோ ஒளிப்பதிவுகளையும் சேர்த்து கையாள்வார்கள். அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினால், அது 60-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளாக இருக்கும்; இப்படியே, இன்னும் பெரிய பெரிய நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் பேரளவில் ரத்தாகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனவே, என்னைப் பொறுத்த வரை இத்துறைச் சார்ந்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் மோசமாக இருக்கின்றன” என்றார்.
திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் தள்ளி வைக்கப்படும் போது அல்லது ரத்தாகும் சூழ்நிலையை, புகைப்படக் கலைஞர்கள் எவ்வாறு கையாளலாம் என்பதற்கான ஆலோசனையையும் அவர் வழங்கினார்.
“இந்த தொழிலில் மிக முக்கியமான விஷயமே, சேவை வழங்குபவரும், வாடிக்கையாளரும் கலந்துப் பேசுவது தான். வாடிக்கையாளார்கள், தங்களது நிகழ்ச்சிக்கான தேதியை தள்ளி வைக்கும் போது, புதிய தேதி புகைப்படக்காரர்கள் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளார்களுக்கு வசதிப்படுமா என்பது கவனிக்கப்பட வேண்டும். அதே போல், வாடிக்கையாளர்கள் இதர சில சேவை வழங்குநர்களின் வசதியைப் பார்க்க வேண்டும் என்பதால், முடிந்த வரை புகைப்படக்காரர்கள் வாடிக்கையாளர்களுடன் ஒத்துழைக்க முயற்சிக்க வேண்டும். இது மிகவும் கடினமான காலக்கட்டம் என்பதால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைப்பிடித்தால், தீர்வுப் பிறக்கும்" என விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
ஆலோசனைகள் தேவைப்படும் புகைப்படக் கலைஞர்களுக்கு இச்சங்கம் தங்களால் ஆன ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
அது மட்டும் இன்றி, முகநூல், Instagram உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருவதாக கூறிய விக்னேஸ்வரன் அதன் தொடர்பான தகவலையும் பகிர்ந்துக் கொண்டார்.
“ஏற்கனவே தெரிந்து விஷயத்தை மேலும் ஆழமாக கற்றுக் கொடுக்கும் முயற்சியை மேற்கொள்கின்றோம். உதாரணத்திற்கு, ‘photo editing’. அதனை எப்படி வேறு வகையில் செய்யலாம் என்பதை கற்றுக் கொடுக்கின்றோம். வாடிக்கையாளர்களை எவ்வாறு கையாள்வது. தொழிலை எப்படி கையாள்வது – மேம்படுத்துவது. எவ்வாறு ஒப்பந்தம் தயாரிப்பது, இந்த ஒப்பந்தம் என்பது மிகவும் அவசியம். சேவை வழங்குபவரை மட்டும் அல்ல, வாடிக்கையாளர்களின் நலனைக் காக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும். எனவே, இந்த ஒப்பந்தம் மிக மிக முக்கியம் என்பதை இச்சங்கம் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றது” என்றார்.
மேலும் பேசிய அவர்,
“ டிஜிட்டல் மார்கெட்டிங் வாயிலாக புகைப்படக்காரர்களும், வீடியோ ஒளிப்பதிவாளர்களும் என்ன செய்யலாம்? தற்போதைய சூழ்நிலையில் வெளி நிகழ்வுகள் என்று எதுவும் இல்லை. இதையடுத்து, புதிதாக சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, வீட்டில் இருந்தப்படியே எப்படி வாடிக்கையாளர்களை சேவை வழங்குவது என்பது தான் அது. புகைப்படக்காரர்கள், Face Time, Web Cam ஆகிய வசதிகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களை அவர்கள் வீட்டில் இருந்தப்படியே புகைப்படம் எடுக்கும் அணுகுமுறையை கையாளுகின்றனர். அந்த தகவல்களை கூட நாங்கள் பகிர்ந்து உதவுகின்றோம்” என தெரிவித்தார்.
இத்துறை முழுமையாக மீண்டு வர இன்னும் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகலாம் என தாம் கணிப்பதாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.
அதுவரை, இத்துறைச் சார்ந்தவர்கள் இக்கட்டான சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ளலாம் என்ற ஆலோசனையையும் அவர் பகிர்ந்துக் கொண்டார்.
“ஆக இந்த இக்கட்டான காலக்கட்டத்தில், டிஜிட்டம் மார்க்கெட்டிங் எப்படி கையாள்வது, அத்தியாவசிய சேவைகள் பற்றி இத்துறைச் சார்ந்தவர்கல் கற்று வைத்துக் கொள்ளலாம். இதன் வழி நமக்கு ‘back up income’ கிடைக்க வாய்ப்புள்ளது. உண்மையில் கூற வேண்டுமானல், இப்படியும் சூழ்நிலைகள் மாறும் என்பதை இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டம் நமக்கு உணர்த்தியிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும், எப்படி முடிவெடிக்க வேண்டும் ஆகியவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிக்கின்றது; இதை தான் துன்பத்திலும் நன்மையை காண வேண்டும் என்பார்கள். எனவே, இந்த சூழ்நிலையை கடுமையான ஒரு சவாலாக கருதாமல், திறமைளை மேம்படுத்திக் கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும்” என்றார்.
இச்சங்கத்தின் கீழ், நாடு முழுவதும் ஏறக்குறைய 700 உறுப்பினர்கள் இருப்பதாகவும், ஆண்டுத் தோறும் புகைப்படக் கலைஞர்களின் பணியை கௌரவிக்க, விருதளிப்பு விழாவை இச்சங்கம் நடத்தி வருவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதனிடையே, குறித்த நேரத்தில் தங்களது புகைப்பட அல்லது வீடியோ பதிவுகள் தங்களுக்கு விநியோகிக்கப்படுவதில்லை என்பது, வழக்கமாக வாடிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் மீது வைக்கும் புகார்களில் ஒன்று.
தரத்தை உறுதிச் செய்வதில் கவனம் செலுத்தப்படுவது ஒரு புறமிருந்தாலும், சில நேரங்களில் இத்தகைய தாமதங்களுக்கு எது காரணமாக இருக்கலாம், அதனை எப்படி புகைப்படக்காரர்கள் கையாளலாம் என்பது குறித்தும் விக்னேஸ்வரன் விவரித்தார்.
“இந்த மாதிரியான புகார்களை நானும் அடிக்கடி கேட்டதுண்டு. எனினும், அனைத்து புகைப்படக்காரர்களும் இப்படி தான் என நாம் கூற முடியாது. இந்த மாதிரியான பிரச்னைகளை தவிர்க்கவே, வாடிக்கையாளர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை நாம் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றோம். மிக முக்கியமாக ஒப்பந்தம். புகைப்படக்காரர்கள், தங்களது வேலையை எப்போது முடிக்க முடியும் என்பதை தெளிவாக அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டியது அவசியம்” என விக்னேஸ்வரன் கூறினார்.
அவர் குறிப்பிடும் அந்த ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் விக்னேஸ்வரன் பேசினார்.
“இந்த ஒப்பந்தம் புகைப்படக்காரர்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள உதவும். ஒப்பந்தம் செய்யப்பட்ட பின், ஒருவேளை குறிப்பிட்ட தேதியில் அவர்கள் வேலையை முடித்துக் கொடுக்கவில்லை என்றால், புகைப்படக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு. ஆனால், ஒருவேளை குறிப்பிட்ட தேதிக்கு முன்பே வாடிக்கையாளர்கள், புகைப்படக்காரர்களை குறைக் கூறவோ, புகார் செய்யவோ இது சற்றும் வாய்பளிக்காது” என கூறினார்.
ஒருவேளை தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டு விட்டால் அதனை எவ்வாறு கையாளலாம் என்பதற்கான ஆலோசனையையும் அவர் வழங்கினார்.
“அப்படியே ஒருவேளை குறித்த நேரத்தில் வேலையை முடித்துக் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதாவது புகைப்படக்காரர்கள் வாழ்க்கையில் எதிர்பார சம்பவங்கள் அல்லது பிரச்னைகள் ஏற்பட்டிருந்தால், அவர்கள் வாடிக்கையாளர்களை அணுகி, அவர்களுடன் பேச வேண்டும். வாடிக்கையாளர்களிடம் எடுத்துக் கூறு விதத்தில் அனைத்தையும் தெரிவித்தால், நிச்சயமாக பிரச்னைகளுக்கு தீர்வுக் காண முடியும்” என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இறுதியாக, வாடிக்கையாளார்களுக்கு அவர் கூற நினைப்பது பற்றி இவ்வாறு தெரிவித்தார்.
“அதே போல தான் வாடிக்கையாளர்களும். என்ன அதிருப்தியாக இருந்தாலும் சரி, அதனை பேசி சமாளிக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு பதிலாக, பிரச்னையை முகநூலில் பதிவேற்றுவது, சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு, இந்த தொழில் ஒன்றே அவர்களது குடும்ப வருமானத்தை ஈட்டித் தரக்கூடியதாக இருக்கும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே தான் சேவை வழங்குபவரும், புகைப்படக்காரர்கள் அல்லது வீடியோ ஒளிப்பதிவாளர்கள் ஒப்பந்த உடன்படிக்கை செய்வது அவசியம் என்பதை நான் பலமுறை வலியுறுத்தி வருகின்றேன்” என்றார்.
புகைப்படக்காரர்கள் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்களை உட்படுத்திய இத்துறை சீக்கிரமே மீண்டு வர வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.
சந்திப்பு & தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather