← Back to list
COVID-19: ஓரிரு வாரங்களில் ஓர் இலக்க எண்!
May 11, 2020
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO தொடர்ந்து நீட்டிக்கப்படுவதன் வாயிலாக, நாட்டில் COVID-19 கோறனி நச்சில் தொற்று சம்பவங்கள் எண்ணிக்கை இன்னும் ஓரிரு வாரங்களில், ஓர் இலக்கு எண்ணுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், அந்த இலக்கை அடைவதும் அடையாததும் புதிய வழமைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பதில் பொது மக்கள் காட்டும் ஒத்துழைப்பில் தான் இருக்கிறது என சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah கூறியிருக்கின்றார்.
CMCO ஜூன் 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், COVID-19 கோறனி நச்சில் தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்த, இக்கால நீட்டிப்பு பெரிதும் உதவும் என Datuk Dr Noor Hisham தெரிவித்துள்ளார்.
நாட்டில் நேற்று மேலும் 96 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தனர்.
இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ஐயாயிரத்து 25 பேராக அதிகரித்துள்ளது.
இன்னும் ஆயிரத்து 523 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், Dr Noor Hisham சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில், பள்ளிவாசல்களில் தொழுகை மேற்கொள்ள அனுமதி வழங்குவதற்கான தர செயல்பாட்டு நடைமுறை SOP ஆராயப்பட்டு வருவதாக பிரதமர் Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார்.
கிறிஸ்துவ தேவாலயங்கள், இந்து ஆலயங்கள் உள்ளிட்ட வழிப்பாட்டுத் தலங்களுக்கான SOP-யும் ஆராயப்படுவதாக பிரதமர் கூறினார்.
மாநிலங்களுக்கிடையே பயணிக்கும் சலுகை முடிந்தது!
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்ததால், சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியாமல் இருந்தவர்களுக்காக வழங்கப்பட்ட மாநிலங்களுக்கிடையே பயணிப்பதற்கான 4 நாட்கள் கால அவகாசம் நேற்றுடன் முடிந்து விட்டது.
இன்று தொடங்கி, மாநிலங்களுக்கிடையே பயணிக்க பொது மக்கள் தக்க காரணங்களை கொண்டிருக்க வேண்டும் அல்லது காவல் துறையிடம் இருந்து முதலில் அனுமதி பெற வேண்டும் என, தேசிய காவல் படைத் தலைவர் Tan Sri Abdul Hamid Bador நினைவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, நேற்றைய கடைசி நாளில் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் திரங்கானுவில் இருந்து இதர மாநிலங்களுக்கான, பொது மக்களின் பயணப் போக்குவரத்து சீராகவும், கட்டுப்பாட்டுக்குள்ளும் இருந்தது தெரிய வந்துள்ளது.
BPN – மேல்முறையீட்டுக்கான கால அவகாசம் நீட்டிப்பு!
தேசியப் பரிவுமிக்க உதவி நிதி BPN-னுக்கு மேல்முறையீடு செய்யும் கால அவகாசம் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் தவிர்த்து, இன்று தொடங்கி, உள்நாட்டு வருவாய் வாரியம் LHDN முகப்புகளுக்குச் சென்றும், பொது மக்கள் அந்த மேல்முறையீடுகளை செய்யலாம் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin கூறினார்.
இவ்வேளையில், மேல்முறையீடு செய்பவர்கள், தாங்கள் வேலை இழந்துள்ளது அல்லது தங்களது வருமானம் கணிசமாக குறைந்துள்ளது ஆகியவற்றை காட்டும் கூடுதல் ஆவணங்களை உடன் இணைத்து சமர்பிக்கலாம் என, உள்நாட்டு வருவாய் வாரியம் LHDN தெரிவித்துள்ளது.
BPN விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களில், வேலை இழந்தோர் மற்றும் அதிகப்படியான வருமான குறைப்புக்கு ஆளானவர்களும் அடங்குவர் என்ற புகார் பெறப்பட்டிருப்பதை அவ்வாரியம் சுட்டிக் காட்டியது.
பொது மக்கள், தங்களது மேல் முறையீட்டுப் பாரங்களை LHDN-னின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.
அல்லது, அதன் அலுவலகங்களுக்கு சென்றும் மேல்முறையீடு செய்யலாம்.
இருந்த போதிலும், அனைத்து மேல்முறையீடுகளும் அங்கீகரிக்கப்படும் என உறுதியாக கூற இயலாது என தெரிவித்த பிரதமர், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றியுள்ளவர்களுக்கு அந்த உதவி நிதி வழங்கப்படும் என கூறினார்.
குறைந்தது 5 நாட்கள் ஆகலாம்!
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள PJ, Jalan Othman சந்தை சுற்று வட்டார மக்களுக்கான COVID-19 கிருமித் தொற்றுக்கான பரிசோதனை நேற்று தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அப்பகுதியில் ஏறக்குறைய ஈராயிரத்து 600 பேர் இருக்கின்றனர்; பரிசோதனைகள் முடிய ஐந்து நாட்களாவது ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னதாக, 26 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அங்கு மே 23ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிய நாட்டவர்களுக்கான பரிசோதனை!
நேற்று வரை 24 ஆயிரத்து 125 அந்நிய நாட்டவர்கள், கொரோனா கிருமித் தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
அவர்களில், ஆயிரத்து 132 பேருக்கு அக்கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
487 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
சட்டமன்ற இடைத்தேர்தல்!
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பகாங் Chini சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டி முறை மற்றும் ஆலோசனைகள் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் இருந்து பெறப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு மன்றம், தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம், சுகாதார அமைச்சு, தேசிய காவல் படை ஆகியவை அதிலடங்கும்.
Chini சட்டமன்ற பகுதி தற்போது பச்சை மண்டலங்கள் பட்டியலில் உள்ளது; எனவே, இடைத்தேர்தலை நடத்தி, அதனால் அங்கு எந்தப் பாதிப்புகளும் வராமல் இருப்பதை ஆணையம் உறுதிச் செய்ய வேண்டியிருப்பதாக அதன் தலைவர் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் Datuk Seri Abu Bakar Harun-னின் மறைவை அடுத்து அத்தொகுதி காலியாகியிருக்கின்றது.
தொகுதி காலியான நாளில் இருந்து 60 நாட்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather