← Back to list
COVID-19 மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த இது சரியான நேரம் அல்ல!
Jul 21, 2021
நாட்டு மொத்த மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வரை, COVID-19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது சரிப்பட்டு வராது!
கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டுமென்றால், மக்கள் தொகையில் 40 முதல் 50 விழுக்காட்டினராவது தடுப்பூசி போட்டிருப்பதை உறுதிச் செய்ய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆகக் கடைசி நிலவரப்படி, 14 புள்ளி 3 விழுக்காட்டினர் இரு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு முடித்துள்ளனர்.
இவ்வேளையில், நேற்று ஒரு நாளில், ஏறக்குறைய 3 லட்சம் பேருக்கு COVID-19 தடுப்பூசிகள் போடப்பட்டன.
அதில் 95 ஆயிரத்திற்கும் அதிகமானோர் 2ஆம் டோசைப் போட்டு முடித்தவர்கள்.
இந்த எண்ணிக்கையையும் சேர்த்து, நாடு முழுவதும் இதுவரை ஒன்றரை கோடிக்கும் அதிகமான COVID-19 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
Sinovac - Pfizer ஆகிய இரு தடுப்பூசிகளுமே ஒரே ஆற்றல் கொண்டவை!
Sinovac - Pfizer ஆகிய இரு தடுப்பூசிகளுமே COVID-19 கிருமியை தடுக்கும் ஒரே ஆற்றலை தான் கொண்டுள்ளன.
அதில் வித்தியாசங்கள் எதுவும் இல்லை என சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெளிவுப்படுத்தியிருக்கின்றார்.
அந்த இரு தடுப்பூசிகளுமே, கொரோனா தொற்றால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளை தடுக்கக் கூடியவை என்பது, மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.
கொரோனா தொற்றினால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலையை தடுக்கவும் அத்தடுப்பூசிகள் உதவுவதாக அவர் கூறினார்.
COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், Sinovac தடுப்பூசிகளின் கையிருப்பு முடிந்து விட்டதால் தான், அதன் பயன்பாடு நிறுத்தப்படுகிறது;
அதற்கும், தடுப்பூசிகளின் ஆற்றல்களுக்கும் தொடர்பில்லை என, தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
மற்றொரு நிலவரத்தில், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்படும் AstraZeneca தடுப்பூசிகளை, அவசர தேவைக்குப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் WHO அனுமதி அளித்திருக்கிறது.
"காலியான" தடுப்பூசி கிடைத்தவர்கள் மீண்டும் அழைக்கப்படுவார்கள்!
COVID-19 தடுப்பூசி போடச் சென்ற போது, தங்களுக்கு மருந்தில்லா, காலியான ஊசி போடப்பட்டதாக கண்டறியப்படும் நபர்களுக்கு, மீண்டும் புதிய டோஸ் போடப்படும்!
சம்பந்தப்பட்டவர்கள் மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அழைக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி Berita Harian தகவல் வெளியிட்டிருக்கின்றது.
சிலர் தங்களுக்கு காலியான தடுப்பூசிகள் போடப்பட்டதாக் கூறி காணொளிகளைப் பதிவுச் செய்து அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ள சம்பவங்களை அமைச்சு சுட்டிக் காட்டியது.
அண்மையில் கூட, கெடாவில், drive-thru வழியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளச் சென்ற நபருக்கு, காலியான தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
இத்தகைய சம்பவங்களை தாங்கள் கடுமையாக கருதுவதாக கூறிய தடுப்பூசி திட்ட அதிகாரிகள், அதன் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தது.
பினாங்கு காவல் துறையின் விளக்கம் தேவை!
பினாங்கு Juruவில், பள்ளிவாசலுக்கு வெளியே பொது இடத்தில் 200க்கும் அதிகமானோர் ஒன்றுக் கூடி தொழுகை செய்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு, மாநில காவல் துறை தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அச்சம்பவம் தொடர்பான அறிக்கையை விரைந்து சமர்பிக்குமாறும், உள்துறை அமைச்சு கேட்டுக் கொண்டிருக்கிறது.
அச்சம்பவம் இன்னும் விசாரணையில் இருப்பதால், சர்ச்சைக்குரிய கருத்துகளை யாரும் பதிவிட வேண்டாம் என்றும் அமைச்சு பொது மக்களை எச்சரித்துள்ளது.
அச்சம்பவம் தொடர்பில் இதுவரை 49 பேர் கைதாகியுள்ளனர்.
புதிதாக மூன்று தொலைப்பேசி எண்கள்!
தேசிய உணவுக் கூடை திட்டத்தின் கீழ் உதவிக்கு விண்ணப்பம் செய்ய, அரசாங்கம் மேலும் மூன்று தொலைப்பேசி எண்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.
அத்திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதில் இருந்து, அதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, அக்கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 108 மாவட்டங்களைச் சேர்ந்த சமூக நலத் துறையின் நடவடிக்கை அறை வாயிலாக, இதுவரை ஆறாயிரத்து 584 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாக, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.
இந்தியாவில் 67 விழுக்காட்டினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி%!
இந்தியாவில் ஆகக் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், பங்கேற்றவர்களில் 67 விழுக்காட்டினர் கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது.
குறிப்பிட்ட மாவட்டங்களில் 6 வயதுக்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ரத்த அணுக்கள் மீதான ஆய்வின் அடிப்படையில், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு, அப்பெருந்தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
எனினும், 40 கோடி மக்கள் இன்னும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் கூறுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather