← Back to list
எவரெஸ்ட் உச்சியில் மலேசியா ஜொலித்த நாள்!
May 22, 2020
மே 23, 1997!
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முறையாக மலேசிய கொடி கம்பீரமாக பறந்த நாள்.
அந்த வரலாற்று சம்பவம் நிகழ்ந்து நாளையுடன் 23 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
ஆனாலும், அந்த நாளை நினைக்கும் போது மனதில் உற்சாகம் சற்றும் குறையவில்லை என கூறுகின்றனர், அவ்வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான டத்தோ மகேந்திரனும், டத்தோ மோகனதாசும்.
அந்த நாள் ஞாபகம் குறித்து கூறுகின்றார் டத்தோ மகேந்திரன்...
“Everest 97-ன்னு சொன்னாலே அந்த ஒட்டுமொத்த பயணமே மறக்க முடியாத ஓர் அனுபவம் தான். குறிப்பாக அந்த மலை உச்சியைப் போய் சேர்ந்த நாள், 23 மே... நிச்சயமாக மறக்க முடியாத ஒரு நாள்..எங்களுடைய இலக்கை அடைந்த நாள். முதன் முறையாக மலேசிய கொடி உலகத்தின் உச்சியில் பறந்த நாள். எங்களுடைய முயற்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். அந்த ஞாபகம் இன்னும் மனதில் பசுமையாக தான் இருக்கின்றது” என தெரிவித்தார்.
இவ்வேளையில், அப்பயணத்தின் போது தமக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றை பகிர்கின்றார் டத்தோ மோகனதாஸ்.
“மறக்க முடியாத சம்பவம் என்றால் அது அந்த எவரெஸ்ட் base camp-பில் கிடைத்த அனுபவம் தான். அந்த Khumbu ice-க்கு முன் இருப்பதை தான் Everest village என்பார்கள். யாராக இருந்தாலும், எவரெஸ்ட் மலையை ஏறும் பயணத்தை இந்த இடத்தில் இருந்து தான் தொடங்குவார்கள். ஏறக்குறைய 2-3 மாதங்கள் அங்கு தங்கியிருக்க வேண்டி வரும். அந்த இடத்தில் தண்ணீர் இருக்காது. குளிக்கும் வசதியும் இருக்காது. கூடாரம் மட்டும் அமைத்துக் கொண்டு அதில் தான் தங்கியிருந்தோம். வசதிகள் அவ்வளவாக இருக்காது. இக்காலத்தில் இருப்பது போன்று, இணைய வசதி, Wifi அப்படி எதுவும் இல்லை. எங்களிடம் இருந்தது Telekom Malaysia கொடுத்த தொலைப்பேசி மட்டும் தான். Satellite தொலைப்பேசி அது. அதனை மட்டும் தான் பயன்படுத்தினோம். ஆக, அந்த காலக்கட்டம் மிகவும் சவாலானது’ என கூறினார்.
ஆண்டுகள் பல கடந்தாலும், மலையேறும் நடவடிக்கையை தாம் இன்று வரை தொடர்வதாக டத்தோ மகேந்திரன் தெரிவித்தார்.
“எவரெஸ்ட் பயணத்திற்கு பிறகு, தொடர்ந்து மலை ஏறிக் கொண்டு தான் இருக்கின்றேன். குறிப்பாக, ஒவ்வோர் ஆண்டும் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்று, கினபாலு மலை ஏறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காரணம் அங்கு செல்ல இயலவில்லை. அது மட்டும் இல்லாமல் ஒரு சில முறை நேப்பாளுக்கும் சென்று மலை ஏறி இருக்கின்றேன். ஆகக் கடைசியாக நேப்பாளுக்குச் சென்றது 2017 ஆம் ஆண்டு. எவரெஸ்டுக்குப் பிறகு நேப்பாளத்தில் ஏறிய ஆக உயரமான மலை Highland Peak, அதன் உயரம் 6,189 மீட்டராகும்” என தெரிவித்தார்.
தமது நடவடிக்கைகள் குறித்து டத்தோ மோகனதாஸ் இவ்வாறு கூறுகின்றார்.
“நான் இன்னும் மலை ஏறிக் கொண்டு தான் இருக்கின்றேன். கினபாலு மலை ஏறி உள்ளேன். 2016ஆம் ஆண்டு திரு கைலாய யாத்திரைக்குச் சென்றேன். மேலும், மச்சு பிச்சு (Machu Picchu) உள்ளிட்ட மலைகளும் ஏறியுள்ளேன். பிறகு, கிளிமஞ்சாரோ மலை, Tanzania, அது 19 ஆயிரம் அடிகளுக்கும் மேல் உள்ளது. அதன் பிறகு, எவரெஸ்ட் base camp- புக்கும் சென்றுள்ளேன்” என்றார்.
இதனிடையே, கடின பயிற்சி மற்றும் உழைப்பும் தான், எவரெஸ்ட் உச்சியை தொட்ட முதல் மலேசியர்கள் என்ற பெருமை தங்களை தேடி வர காரணம் என்றும், டத்தோ மகேந்திரன் மற்றும் டத்தோ மோகனதாஸ் தெரிவித்தனர்.
ஆண்டுகள் ஓடினாலும், மலேசியர்கள் இன்றளவும் தமக்கு கொடுக்கும் வரவேற்பு உண்மையிலேயே ஆச்சரியப்பட வைப்பதாக டத்தோ மகேந்திரன் கூறினார்.
“23 ஆண்டுகள் ஆனாலும், அந்த வெற்றியின் தாக்கம் மக்களின் மனதில் இன்னும் பசுமையாக தான் இருக்கின்றது. அந்த வரவேற்பும் இன்னும் குறையாமல் தான் இருக்கின்றது. என்னுடைய மாணவர்கள் மத்தியில் இதனை நான் தினமும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். அதனை தவிர்த்து, நிகழ்ச்சிகளுக்குப் போகும் போது, அங்கு மக்கள் கொடுக்கின்ற ஆரவாரம், வரவேற்பு அதனையெல்லாம் பார்க்கும் போது, இப்பொழுது தான் எவரெஸ்ட் மலையில் இருந்து இறங்கி வந்தது போன்ற ஓர் உணர்வு. நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு குழுவாக புகைப்படம் எடுப்பது, தம்படம் எடுப்பது எல்லாம் தற்போது வழக்கமாகி விட்டது” என தெரிவித்தார்.
இவ்வேளையில், வாய்ப்புக் கிடைத்தால் மீண்டும் எவரெஸ்ட் சிகரம் ஏற தாம் தயார் என, 1997 ஆம் ஆண்டு இருந்த அதே வேகத்துடன் கூறுகின்றார் டத்தோ மோகனதாஸ்.
“கடந்தாண்டு கூட, எவரெஸ்ட் base camp சென்று வந்த போது, என்னுடைய அனுபவங்களை மீண்டும் நினைத்துப் பார்த்தேன். அடுத்தது எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா என தெரியவில்லை. ஆனால் ஒருவேளை எவரெஸ்ட் சிகரம் ஏற மீண்டும் வாய்ப்புக் கிடைத்தால், ஏன் முயற்சிக்கக் கூடாது? வாய்ப்பு எப்போதும் நமக்கு வராது” என கூறினார்.
இதனிடையே, எவரெஸ்ட் மலையேறும் துணிகர நடவடிக்கையில் ஈடுபட விரும்புவோருக்கு டத்தோ மகேந்திரன் இந்த ஆலோசனையை வழங்குகின்றார்.
“எவரெஸ்ட் மலை ஏற வேண்டும் என நினைக்கும் நண்பர்களுக்கு தெரியும். வேண்டிய அனைத்து தகவல்களும் இணையத்தில் கிடைக்கும். அதே போல, எம்மாதிரியான தயார் நிலையில் இருந்தால் அந்த எவரெஸ்ட் மலையில் ஏற முடியும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். பயிற்சி மிக மிக முக்கியம். இன்றைய சூழ்நிலையில், ஒரே மிகப் பெரிய தடை என்றால் அது பணத் தேவை தான். அந்த தேவை பூர்த்தியாகி விட்டால், பாதி சவால் நிறைவேறி விட்டதற்கு சமம். அடுத்ததாக, நம்பிக்கையான ஒரு மலையேறும் நடவடிக்கைக்கான நிறுவனத்தை (trekking agency) தேர்ந்தெடுப்பது முக்கியம். காரணம், இது வாழ்க்கையில் ஒரு முறை நிறைவேற்றப்படக்கூடிய இலட்சியம். பாதுகாப்பாக மலை ஏறுவது போல, மலையை விட்டு இறங்கும் போதும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அதற்கு அனுபவமிக்கவர்களின் வழிகாட்டுதல் மிக மிக அவசியம்” என வலியுறுத்தினார்.
1997ஆம் ஆண்டு மலேசியா – எவரெஸ்ட் திட்டத்தின் கீழ், பத்து பேர் கொண்ட மலேசியர்கள் அந்த துணிகரப் பயணத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், டத்தோ மகேந்திரன் - டத்தோ மோகனதாஸ் மட்டுமே அந்த சிகரத்தை தொட்டனர்.
அன்றைய தினம், மலேசிய நேரப்படி பகல் 2.10 மணிக்கு டத்தோ மகேந்திரனும், பகல் 2.25 மணிக்கு டத்தோ மோகனதாசும் 8, 850 மீட்டர் உயரத்திலான எவரெஸ்ட் உச்சியில் கால் பதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘Malaysia Boleh’ என்ற வாசகம் உலகம் முழுக்க ஒலித்த நாள் அது!
சந்திப்பு & தொகுப்பு : சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather