← Back to list
MCO-வுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்!
Apr 14, 2020
MCO-வுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்!
மலேசியர்கள் இம்முறை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO-வுக்கு கட்டுப்பட்டு, புத்தாண்டு கொண்டாட்டங்களை வீட்டில் தொடக்கினர்.
அவ்வகையில், இம்முறை தனது விஷுப் புத்தாண்டுக் கொண்டாட்டம் பற்றி கூறுகின்றார் ஜொகூர் குளுவாங்கைச் சேர்ந்த குருவத்திரா வேலாயுதன்.
"இம்முறை ஆடம்பரமாக இல்லாமல், வீட்டில் இருக்கின்றவர்கள் அதிகாலையிலேயே எழுந்து விஷு கனி காணுதல் முடித்தோம். ஒரு தாம்பூலத்தில் கொன்னப்பூ வைத்து அதனுடன் பழங்கள், புது உடைகள், ஆபரணங்கள் ஆகியவற்றை வைத்து காலையில் அதன் முன் கண்விழிப்பதை தான் கனி காணுதல் என்பார்கள். அது மிகவும் விஷேஷமான ஒன்று" என்றார்.
விஷு கனி காணுதல்
இன்றைய நாளில் விஷேஷமாக இருக்ககூடிய உணவுகள் பற்றியும் அவர் விவரித்தார்.
"விஷு சத்யா என்பது தான் இன்றைய நாளின் மற்றொரு சிறப்பம்சம். அதாவது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு உள்ளிட்ட அறுசுவைகளுடன் கூடிய 16 வகை உணவுகளை தயாரித்து குடும்பத்துடன் சேர்ந்து உண்ணுதல் ஆகும்” என தெரிவித்தார்.
மலாக்காவைச் சேர்ந்த ஷாலினி சிவன், MCO-வுக்கு மத்தியில் இம்முறை விஷுப் புத்தாண்டை குடும்பத்தாருடன் சேர்ந்த கொண்டாட நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.
"எப்போதும் வேலைக்குச் சென்று வந்து அவசர அவசரமாக இப்புத்தாண்டை கொண்டாடும் சூழ்நிலை இன்று இல்லை. நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கு ஆணைக்கு மத்தியில் குடும்பத்துடன் சேர்ந்து இப்புத்தாண்டை கொண்டாட எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது" எனக் கூறினார்.
இந்நிலையில், தனது சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் பற்றி இவ்வாறு பகிர்ந்துக் கொள்கிறார், பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த திலகவதி அர்ச்சிணன்.
"அரசாங்க உத்தரவுக்கு கட்டுப்பட்டு நாங்கள் வெளியில் எங்கும் போகவில்லை. கோயிலுக்கும் செல்லவில்லை. வீட்டிற்கு இம்முறை விருந்தினர்களை அழைக்கவில்லை. நாங்கள் எங்கள் உறவுக்காரர்கள் இல்ல விருந்துகளுக்கும் செல்லவில்லை. இருந்த போதிலும், காலையிலேயே எழுந்து, குடும்ப உறவுகளுக்கு கைப்பேசியில் அழைத்து, வீடியோ காணொளி அழைப்பு வாயிலாக ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்துக் கொண்டோம். இன்று இப்புத்தாண்டின் அவசியம் பற்றி, கருத்துகள் தேடி அதனை என் குழந்தைகளுடன் பகிர்ந்துக் கொள்ளவும் ஆவலுடன் இருக்கின்றே" என தெரிவித்தார்.
விழாக் காலங்களை குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாட கிடைத்த வாய்ப்பே பெரும் பாக்கியம்; அதனை பொருள் உணர்ந்து கொண்டாடுவது இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை என்றாலும் தனது சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கம் போல் களைக் கட்டியிருப்பதாக Kota Kemuning-கைச் சேர்ந்த லோகேஸ்வரி மதிவாணன் தெரிவித்தார்.
"ஆண்டு தோறும் மாலையில் கோயிலுக்குச் செல்வது வழக்கம். ஆனால் இம்முறை MCO காரணமாக வெளியில் செல்ல முடியவில்லை. அதனால் காலையிலேயே வீட்டில் பூஜைகளை முடித்து, பொங்கல், வடை, பாயசம் போன்ற உணவுகளை சமைத்து குடும்பத்தாருக்கு பறிமாறினேன். அடுத்து நண்பகலுக்கு சைவ உணவுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இம்முறை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாழை இலை உணவுகளை பறிமாற உள்ளேன்" என தனது குதுகலத்தைப் பகிர்ந்துக் கொண்டார்.
டெங்கிலைச் சேர்ந்த ஆதிலட்சுமி குப்புசாமி தனது வீட்டு சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் ம் பற்றி கூறிய போது...
"கடந்தாண்டு போல கோயிலுக்குச் செல்ல முடியவில்லை என்றாலும், இம்முறை குடும்பத்தாருடன் ஒன்றாக சேர்ந்து வீட்டிலேயே இறைவனை வழிபட எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. புத்தாண்டு அன்று வழக்கமாக அனைவரும் என் அம்மா வீட்டுக்கு மதிய உணவுக்குச் செல்வது வழக்கம். ஆனால் இம்முறை அரசாங்கம் விதித்து கட்டுப்பாட்டுக்கு மதிப்பளித்து வீட்டிலேயே இருந்து நாங்கள் மதிய உணவுக்கு தயாராகின்றோம்.மாலையில் நாடு நலம் பெற கூட்டுப் பிரார்தனை செய்யவுள்ளோம்" என தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில், இம்முறை புத்தாண்டு கொண்டாட்ட அனுபவங்கள் மாறுபட்டாலும், COVID-19 கோறனி நச்சில் பரவலை தடுக்க, வீட்டிலேயே இருக்க வேண்டியதை மக்கள் உணர வேண்டியது அவசியம் என்பதை KL Sentul மாவட்ட காவல் துறைத் தலைவர் ACP எஸ். சண்முகமூர்த்தி சின்னையா வலியுறுத்தியிருந்தார்.
KL Sentul மாவட்ட காவல் துறைத் தலைவர், ACP எஸ். சண்முகமூர்த்தி சின்னையா
"இது ஒரு வித்தியாசமான புத்தாண்டு. ஒவ்வோர் ஆண்டும் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிப்பட்டு, பிறகு வீட்டிற்கு வந்து உணவுகளை உண்டு கழித்து மகிழ்வோம். ஆனால் இம்முறை அவ்வாறு செய்ய இயலாது. சில ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் ‘Live Streaming’ செய்யப்படுகின்றன. மக்கள் அதனை பார்க்கலாம். புத்தாண்டு தான் என்றாலும், அனைவரையும் வீட்டிலேயே இருக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்" என கூறினார்.
நாளை தொடங்கி அமுலுக்கு வரும் 3ஆம் கட்ட MCO-வின் போது மக்கள் இன்னும் பொறுப்புடன் நடந்துக் கொள்வார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ACP சண்முகமூர்த்தி கூறினார்.
சாலை தடுப்புச் சோதனைகளின் போது வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கின்றன; சிலர் இன்னமும் தேவையில்லாத காரணங்கள் கூறி வெளியில் பயணிக்கின்றனர்.
அதிலும் சிலர், காவல் துறையிடமே கோபத்தை காட்டும் போக்கையும் அவர் சுட்டிக் காட்டினார்.
"சில பேர் காவல் துறையின் அறிவுரைகளை கேட்க மறுக்கின்றார்கள். எங்களிடம் வாக்குவாதம் புரிகின்றனர். எங்களிடம் வாக்குவாதம் புரிந்து பயனில்லை. மக்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எங்களது எதிரிகள் அல்ல; அந்த வைரஸ் தான்" என அவர் தெரிவித்தார்.
An article by: Sauriyammal Rayappan
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather