← Back to list
அன்பே பிரதானம்!
Apr 09, 2020
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு MCO, மனிதர்களுக்கிடையிலான அன்பை மட்டும் அல்ல வாயில்லா ஜீவன்களிடம் மனிதர்கள் காட்டி வரும் அன்பையும் நமக்கு அடையாளம் காட்டியிருக்கின்றது!
இந்த இக்கட்டான காலக்கட்டத்தில், குறிப்பிட்ட சிலர் வீதிகளில் சுற்றித் திரியும் வாயில்லா ஜீவன்களுக்கு குறைந்தது ஒரு வேளை உணவளித்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் தான் சிலாங்கூர் பத்துமலையைச் சேர்ந்த சுமன் கோபால்.
வீட்டில் இருக்கும் இக்காலக்கட்டத்தில், பத்துமலை சுற்று வட்டாரத்தில் நாள் ஒன்றுக்கு 200-க்கும் அதிகமான பிராணிகளுக்கு, தனது நண்பர்களின் ஆதரவுடன் உணவளித்து வருவதாக சுமன் ராகா செய்தியிடம் தெரிவித்தார்.
"ஒரு நாளைக்கு ஏறக்குறைய 30 - 40 கிலோ அரிசியுடன், முழு கோழி இறைச்சி, கோழி கால், ஈரல் ஆகியவற்றுடன், இஞ்சி, பூண்டு சேர்த்து சுத்தமான, சுகாதாரமான, சத்தான முறையில் இந்த உணவு தயாரிக்கப்படுகிறது" என்றாரவர்.
அப்படி ஒவ்வோரு முறையும் உணவு எடுத்துச் செல்லும் போது தனக்கு கிடைக்கும் ஆத்மார்த்தமான உணர்வு பற்றி சுமன் கூறிய போது....
"நான் வழக்கமாக லாரியில் தான் இந்த உணவுகளை கொண்டுச் செல்வேன். லாரியின் வழக்கமான ஹார்ன் சத்தத்தை கேட்டதுமே அந்த ஜீவராசிகள் என்னை நோக்கி ஓடி வந்து, மேலே பாய்ந்து விளையாடும் அந்த தருணத்தை நிச்சயமாக வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றும் சுமன் உருக்கத்துடன் கூறினார்.
இவ்வேளையில், MCO அமுலில் இருப்பதால், தினமும் வெளியில் சென்று பிராணிகளுக்கு உணவளித்து வருவதற்காக, காவல் துறையிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்றிருப்பதாகவும் சுமன் கூறினார்.
"இந்த பெர்மிட்டை வழங்கிய காவல் துறைக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். சுற்று வட்டாரப் பகுதியில் அனுமதிக்கப்பட்ட பத்து கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வர இந்த பெர்மிட் உதவுகின்றது" என்றாரவர்.
இவரைப் போலவே, கடந்த 11 ஆண்டுகளாக வீதிகளில் சுற்றித் திரியும் பிராணிகளுக்கு உணவளித்து வரும் சிலாங்கூர் பூச்சோங்கைச் சேர்ந்த சகோதரிகள் தேவிகா – செல்வமலர் ஆகியோரின் அனுபவத்தையும் ராகா செய்தி கேட்டறிந்தது.
எப்போதும் போல அல்லாமல் இந்த MCO காலக்கட்டத்தில், சுற்று வட்டாரங்களில் ஆள் நடமாட்டம் இன்றி, கடைகள், உணவகங்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் மூடப்பட்டிருப்பதால், இப்பிராணிகளுக்கான உணவுத் தேவைகள் அதிகரித்திருப்பதாக தேவிகா நம்மிடம் தெரித்தார்.
தற்போது நாளொன்றுக்கு தமக்கு தேவைப்படும் பிராணிகளுக்கான உணவுகள் பற்றி தேவிகா இவ்வாறு கூறுகின்றார்.
"நிறைய பிராணிகளுக்கு உணவளிப்பதால், எனக்கு எப்படியும் ஒரு நாளுக்கு 100 கிலோ நாய்களுக்கான பதப்படுத்தப்பட்ட உணவுகளும், 5 கிலோ வரையில் பூனைகளுக்கான உணவுகளும் தேவைப்படுகின்றன” என கூறினார்.
பூஞ்சோங் வட்டாரத்தில் ஏறக்குறைய 70 முதல் நூறு பிராணிகளுக்கு தினமும் உணவளித்து வருவதாக கூறிய தேவிகா, கைவிடப்பட்டு, ஆபத்து அல்லது விபத்துகளில் மாட்டிக் கொள்ளும் பிராணிகளை காப்பாற்றி அவற்றுக்கு முதலுதவி வழங்கும் சேவையையும் செய்து வருகின்றார்.
இவ்வேளையில், இதற்கு முன் குடும்பமாகச் சென்று, வீதியில் சுற்றித் திரியும் பிராணிகளுக்கு உணவளித்து வந்த சிலாங்கூர் Dengkil-லைச் சேர்ந்த பாலர் பள்ளி ஆசிரியரான கோமளா உத்தமன், MCO-வை அடுத்து, தாம் ஒருவர் மட்டும் தினமும் வெளியில் சென்று பிராணிகளுக்கு உணவளித்து வருவதாக கூறினார்.
அதற்காக தாம் எடுத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அவர் இவ்வாறு கூறுகின்றார்.
"வீட்டை விட்டு வெளியேறும் போது சுவாசக் கவசம் அணிந்து, கைகளில் கிருமி நாசினி திரவத்தை தேய்த்துக் கொண்டு, பிராணிகளுக்கு உணவளித்து விட்டு வீடு திரும்பும் போது, கையுறைகள், சுவாசக் கவசங்கள் ஆகியவற்றை முறையாக கழற்றி அப்புறப்படுத்தி விட்டு, மீண்டும் கிருமி நாசினி திரவத்தை கைகளில் தேய்த்து, கை கால்களை கழுவி விட்டு பின்பு தான் வீட்டுக்குள் நுழைவேன்" என்றார்.
கடந்த 4 ஆண்டுகளாக, இவ்வாறு பிராணிகளுக்கு உணவளித்து வருவதாகவும், அதற்காக தாம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை செலவிடுவதை சுமையாக கருதவில்லை என்றும் கோமளா தெரிவித்தார்.
இவ்வேளையில், இந்த MCO காலக்கட்டத்தில், வீதிகளில் சுற்றித் திரியும் வாயில்லா ஜீவன்களுக்கு பலர் மனிதாபிமான அடிப்படையில் உணவளித்து வரும் செயல் தம்மை நெகிழ வைப்பதாக கூறுகின்றார் Putra Heights-சை சேர்ந்த கால்நடை மருத்துவர் தீபா ராஜூ.
எனினும், புதிதாக அம்முயற்சியில் இறங்க விரும்புவோருக்கு Dr தீபா இந்த ஆலோசனையை வழங்கினார்.
"வீட்டில் சாப்பிட்டு முடிக்காத மிச்ச உணவுகள் அல்லது குளிர்பதனப் பெட்டிக்குள் பல நாட்களாக வைக்கப்படிருந்த கறி உள்ளிட்ட பழைய உணவுகளை தவிர்த்து விட்டு, முடிந்தளவுக்கு பிராணிகளுக்கு சத்தான உணவுகளை கொடுங்கள். காரணம், பிராணிகளுக்கும் வயிற்று வலி, நச்சுணவுப் பாதிப்புகள் ஏற்படும் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்" என நினைவுறுத்தினார்.
COVID-19 பரவலை கருத்தில் கொண்டு, பொது மக்கள் பிராணிகளுக்கு உணவளிக்கச் சென்று வந்தப் பின் சுய சுத்தத்தை பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என்றும் Dr தீபா வலியுறுத்தினார்.
An article by: Sauriyammal Rayappan
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather