← Back to list
பள்ளி விடுமுறைக்கால முயற்சிகள்!
Mar 24, 2020
நாட்டில், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமுலுக்கு வந்து இன்றுடன் சரியாக ஒரு வாரம் ஆகின்றது.
பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ள இக்காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் பற்றி நமக்கு விவரிக்கின்றார் ஆசிரியர் பரமசிவன் ரங்கன்.
ஆசிரியர் பரமசிவன் ரங்கன்
“இணைய வசதி உள்ள பெற்றோர்கள், அவ்வசதியைப் பயன்படுத்தி அதிலிருந்து மாணவர்களுக்கு கற்றலுக்கான விஷயங்களை எடுத்துக் கொடுக்கலாம்; அவ்வசதி இல்லாதவர்கள், எழுத்துத் திறன், வாசிப்பு திறனை மேம்படுத்த உதவுவதோடு, கைவினைப் பொருட்கள் செய்ய கற்றும் கொடுக்கலாம்; அல்லது, சிறு சிறு வீட்டு வேலைகளைக்கூட பிள்ளைகளுக்கு கற்றுத் தரலாம். இதன் வழி மாணவர்கள் சிறந்த பண்புகளை கற்றுக் கொள்வார்கள்” என்றார்.
வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடப் பயிற்சிகளை வழங்க, Whatsapp புலனம், Google Classroom உள்ளிட அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பயிற்சிகளை மாணவர்களிடம் மிக எளிதான முறையில் கொண்டு சேர்க்க இந்த Google Classroom துணைப் புரிவதாகவும் ஆசிரியர் பரமசிவன் தெரிவித்தார்.
“பிள்ளைகள் அவர்களது திறனை அடைத்துள்ளார்களா என்பதை பெற்றோர்கள் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளலாம். மாணவர்களுடைய அடைவு நிலை குறித்த தகவலும் பெற்றோர்களுக்கு நேரடியாக சென்றடைய இந்த வசதிகள் உதவுகின்றன” என தெரிவித்தார்.
இந்த அணுகுறைகளைப் பயன்படுத்தி, தங்களது மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சில ஆசிரியர்களின் முயற்சிகள் பற்றி ராகா செய்தி கேட்டறிந்தது.
அவர்களில் ஒருவரான, சிலாங்கூர் கின்றாரா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மலாய் மொழி பாட ஆசிரியர் கனகேஸ்வரி மௌனர் ராஜூ கூறுகையில்:
ஆசிரியர் கனகேஸ்வரி மௌனர் ராஜூ
‘நான் என்னுடைய மாணவர்களுக்கு Whatsapp புலனம் மற்றும் Google Classroom வாயிலாக நிறைய புதிர் கேள்விகளை பதிவேற்றி வருகின்றேன். மாணவர்களும் அதனை செய்து உடனக்குடன் புள்ளிகளை பார்க்கிறார்கள். கணிதப் பாடத்திற்கான இணையத்தளமும் உண்டு. அதில் புதிர் வாய்ப்பாடு செய்யலாம். ஒரு நிமிடத்திற்குள் எத்தனை கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க முடிகின்றது என்பதை மாணவர்கள் முயற்சிக்கலாம். மாணவர்கள் அதனை முடித்தவுடன் முடிவுகளை Whatsapp-பில் பதிவிடுவார்கள். இதன் வழி ஒரு மாணவர் மற்றொரு மாணவரின் புள்ளிகளை முறியடிக்கூடிய ஆரோக்கியமான போட்டி நிலவும்” என்றார்.
இவ்வேளையில், தனது முயற்சி பற்றி இவ்வாறு கூறுகின்றார், Sungai Buloh சரஸ்வதி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் தமிழ்வாணி கருணாநிதி.
ஆசிரியர் தமிழ்வாணி கருணாநிதி
“ஒவ்வொரு நாளும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், மலாய் என மூன்று மொழிகளிலும் உள்ள பனுவல்களை வாசித்து எனக்கு Whatsapp வாயிலாக காணொளிகள் அனுப்ப வேண்டும் என கூறியிருந்தேன். சிறப்பான படைப்புகளை முகநூல் மற்றும் புலனத்தில் பதிவேற்றும் போது மாணவர்கள் உற்சாகம் அடைகிறார்கள். இதன் வழி எல்லா மாணவர்களுக்கும் அதில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வமும் பெருகுகின்றது” என தெரிவித்தார்.
காஜாங் தமிழ்ப்பளியைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மலாய் மொழிப் பாட ஆசிரியரான காயத்திரி முத்துசாமி கூறுகையில்:
ஆசிரியர் காயத்திரி முத்துசாமி
“இப்போது நாட்டில் பரவி வரும் Covid-19 கிருமித் தொற்றுப் பற்றி i-Think Map மூலமாக படங்களையும், தகவல்களையும் கொடுத்து அவர்களுக்கு கட்டுரை மற்றும் ulasan போன்ற பயிற்சிகள் செய்ய கற்றுக் கொடுத்து வருகின்றேன். நாட்டு நடப்பு நிலவரத்தை அறிந்து கொள்ளவும் இப்பயிற்சி மாணவர்களுக்கு உதவுகின்றது. ஒவ்வொரு மாணவரும் எனக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கும் கட்டுரைகளை சரிபார்த்து நான் அவர்களுக்கு புள்ளிகள் வழங்குவேன்” என்றார்.
இக்காலக்கட்டத்தில் மாணவர்கள் கல்வியில் பின் தங்கி விடக்கூடாது என்பதற்காக தாங்கள் எடுக்கும் இந்த முயற்சிகளுக்கு பெற்றோர்களின் ஆதரவும் மிகப் பெரிய உந்துதலாக இருப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இவர்களைப் போன்று நாட்டில் பல பள்ளிகளில் தங்களது மாணவர்களுக்காக வீட்டில் இருந்தபடியே பாடங்கள் போதிக்க ஆசியர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், அதற்கு பெற்றோர்கள் காட்டும் அக்கறையும் பாரட்டக்கூடிய ஒன்று என்றால் அது மிகையாகாது.
விடைபெறும் முன்பாக, உங்களுக்காக சில ஆலோசனைகள்: Covid-19 பரவலை கையாள, கைகளை அடிக்கடி கழுவுங்கள், ஒருவருக்கொருவர் தள்ளி இருங்கள், மிக முக்கியமாக வீட்டிலேயே இருங்கள்!
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather