← Back to list
MCO: 100 நாட்களை கடந்த மலேசியர்கள்!
Jun 25, 2020
மார்ச் 18ஆம் தேதி, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO அமுலுக்கு வந்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன.
COVID-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்த, அரசாங்கம் அறிவித்த இந்த MCO-வை வெற்றிகரமாக 100 நாட்களுக்கு கடந்து வந்த மலேசியர்களை மலேசிய மருத்துவச் சங்கம் பாராட்டியிருக்கின்றது.
இந்த 100 நாட்கள் என்பது நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் டாக்டர் ஞானபாஸ்கரன் தெரிவித்தார்.
Image: AsiaOne
இந்த 100 நாட்களின் தொடர்சியாக மலேசியர்கள், தொடர்ந்து சுயக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதோடு, அரசாங்கத்தின் அனைத்து ஆலோசனைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக, அடிக்கடி கைகளை கழுவும் புதியப் பழக்கத்தை பழகிக் கொண்ட நாம், அதனை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதே சமயம், அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வரும் தளர்வுகளை மெத்தனமாக பயன்படுத்தக் கூடாது; குறிப்பாக, சிறுப் பிள்ளைகளின் வெளி நடமாட்டத்தை முடிந்த வரை பெற்றோர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் DR ஞானபாஸ்கரன் கேட்டுக் கொண்டார்.
வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலனில், பிள்ளைகள் அக்கறை காட்ட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே, இக்காலக்கட்டம் மிகவும் சவாலாக இருந்தாலும், COVID-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்த தம்மால் ஆன சேவையை தொடர்ந்து வழங்கி வருவதில் திருப்தி என கூறுகின்றார், போர்ட்டிக்சனைச் சேர்ந்த DR ஜெயகுமார் பாண்டியன் கருப்புசாமி.
"பணி ரீதியில், தொடக்கத்தில் கொஞ்சம் கடினமாக தான் இருந்தது; நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, பணிச் சுமையும் சற்று அதிகரித்தது; இதனால் நேரப் பற்றாக்குறையும் இருந்தது; பாதுகாப்பு கவசங்களை அணிவதால், சற்று களைப்பும் ஏற்பட்டது. ஆனால், பிறகு நிலைமை சரியாக விட்டது. தற்போது கொரோனா சம்பவங்கள் குறைந்து வருகின்றன. எனவே, நாம் தொடர்ந்து சுய சுத்தத்தை பாதுகாக்க வேண்டும் என்பது எனது கருத்து" என ஜெயகுமார் தெரிவித்தார்.
இதனிடையே, மருத்துவ முன்வரிசைப் பணியாளர்களை தவிர்த்து, MCO நாட்களை வீட்டிலேயே செலவிட முடியுமா என்ற நிலையை மாற்றி, அனைத்தும் சாத்தியம் என்பதை மலேசிய மக்கள் நிரூபித்துள்ளனர்.
அப்படி வீட்டிலேயே இருந்துக் கொண்டு, தங்களது சமையல் ஆர்வத்தை இன்று பகுதி நேர வருமானம் ஈட்டும் தொழிலாகவே மாற்றியுள்ளனர் பூச்சோங்கைச் சேர்ந்த இளவரசி மற்றும் கொடி பெருமாள் சகோதரிகள்.
தனது அனுபவம் குறித்து பகிர்கின்றார் இளவரசி...
" MCO-வின் போது வீட்டில் இருக்கும் நேரத்தை பயனுள்ளதாக மாற்ற எண்ணினோம். எங்களுக்கு தெரிந்த உணவுகளை சமைத்து அதனை வீட்டில் உள்ளவர்கள், அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து சுவைக்கச் சொன்னோம். அதுவே நாளடைவில் எங்களுக்கு பகுதி நேர தொழிலாக மாறி விட்டது; இதனால், வீட்டில் இருந்தபடியே, உபரி வருமானத்தையும் எங்களால் ஈட்ட முடிகின்றது" என இளவரசி தெரிவித்தார்.
இவ்வேளையில், இந்த MCO காலம் மாணவர்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்து விட்டதாக கூறுகின்றார், மலாயாப் பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவி தவனேஸ்வரி ராஜேந்திரன்.
"இது மாணவர்களுக்கு சற்று சவாலான காலக்கட்டம் என்றே கூறலாம்; இந்த 100 நாட்களை எப்படி கடந்தோம் என்றுக் கூட புரியவில்லை. வீட்டில் இருந்து கல்வி கற்கும் அனுபவம், அதுவும் விரிவுரையாளர்களை நேரில் பார்க்காமலேயே கல்வி கற்கும் இந்த அணுகுமுறை புதுமையாக இருக்கின்றது. இந்த அனுபவத்தை என்றுமே மறக்க முடியாது என்று தான் கூற வேண்டும்" என தவனேஸ்வரி கூறினார்.
வீட்டில் இருந்து கல்வியை தொடரும் இப்புதிய வழமை தற்போது தனக்கு சகஜமாகி விட்டதாகவும் தவனேஸ்வரி தெரிவித்தார்.
இதனிடையே, ஆசிரியர் என்ற முறையில், இந்த MC0 காலக்கட்டத்தில் தாம் நிறைய புதுப் புது திறன்களை கற்றுக் கொண்டதாக கூறுகின்றார், சிரம்பானைச் சேர்ந்த கலைச்செல்வி குமணன்.
"இந்த MCO நாட்களை எப்படி கடக்கப் போகின்றேன் என நான் நினைத்ததுண்டு. ஆனால், இணையம் வழி கல்வி கற்றுத் தரும் அதே வேளையில், என் மாணவர்களுக்கு தேவையான பாடங்களை சுயமாக இணையத்தில் தயாரித்து கொடுக்க நான் பழகிக் கொண்டேன். முகம் பார்த்து மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தாலும், மாணவர்கள் என்னிடம் இப்போது தான் அதிக நெருக்கமாக இருப்பதை நான் உணர்கின்றேன்" என கலைச்செல்வி கூறினார்.
இவ்வேளையில், இந்த நீண்ட காலக்கட்டத்தில் வீட்டிலேயே தோட்டம் போட்டு, ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இந்த MCO காலம் தனக்கு வழிக்காட்டியிருப்பதாக போர்ட்டிக்சனைச் சேர்ந்த ஜூலி ஆமோஸ் கூறுகின்றார்.
"தோட்டம் போடுவது எனக்குப் பிடிக்கும்; சொந்த தொழில் செய்து வந்ததால் அதில் முழுமையாக ஈடுபட என வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால், MCO வந்ததும், அந்த நேரத்தை வீட்டில் தோட்டம் போடுவதற்கு பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். வெளியே செல்ல முடியாத காரணத்தால், வீட்டில் இருந்த பல்வேறு காய்கறிகளின் விதைகளை எடுத்து, உதாரணத்திற்கு கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி ஆகியவை தவிர்த்து, இஞ்சிகளை சிறு துண்டுகளாக்கி அதன் மூலம் புதுப் பயிர்களை பயிரிட்டேன். என் கணவர் எனக்கு உறுதுணையாக இருந்தார். தற்போது, வெள்ளை முள்ளங்கி, குடை மிளகாய், சேலட் கீரைகள் போன்ற அரிய சில காய்கறிகளையும் பயிரிட்டுள்ளேன். வீட்டு சமையலுக்கு அவை உதவுகின்றன; அடுத்த நிறையப் பூச்செடிகளை நடுவதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளேன்" என ஜூலி தெரிவித்தார்.
சிறிய தோட்டம் என்றாலும், இம்முயற்சி மனதுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது என்றும் ஜூலி கூறினார்.
சந்திப்பு & தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather