← Back to list
COVID-19 தடுப்பூசிகள் விற்பனைக்கு அல்ல!
Jun 25, 2021
COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், மலேசியாவில் அனைவருக்கும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
எனவே தடுப்பூசிகள் விற்பனைக்கு என யார் கூறினாலும், காவல் துறையில் புகாரளிக்குமாறு, தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin பொது மக்களை வலியுறுத்தியிருக்கின்றார்.

இதன் தொடர்பில் சிலர் கைதாகியிருப்பதாக கூறிய Khairy, மேற்கொண்டு விவரங்களை PDRM அறிவிக்கும் என்றார்.
மேலும் பேசிய Khairy, தடுப்பூசி போடும் மையங்களாக செயல்படும் தனியார் துறைகளும் இத்தடுப்பூசிகளை விற்க அனுமதியில்லை.
அல்லது தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும் மக்களுக்கு ஆலோசனை என்ற பெயரில் கட்டணமும் வசூலிக்ககூடாது என Khairy திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தனியார் கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றை Khairy குறிப்பிட்டுப் பேசினார்.

இதே விதிமுறை, தொழில் துறைகளுக்கும் பொருந்தும் என Khairy சொன்னார்.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், தொழில் துறைகளுக்கும் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.
தடுப்பூசி போடும் மையங்களை அமைப்பது, அச்சேவைக்கு மருத்துவ முன்களப் பணியாளர்களை வரவழைப்பது போன்ற நிர்வாக செலவினங்களை அந்தந்த நிறுவனங்கள் அல்லது முதலாளிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும்;
அதைவிடுத்து, நிர்வாக செலவினத்தை ஈடுகட்ட, தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்ய முதலாளிகளுக்கு அனுமதி கிடையாது என்றும் Khairy தெளிவுப்படுத்தினார்.
மேலும் அதிகமானோர் தடுப்பூசி போட்டனர்!
COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டிருக்கின்றது.

நேற்று மட்டும் 2 லட்சத்து 68 ஆயிரத்து 604 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
அவர்களில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 201 பேர் முதல் டோசைப் பெற்றுக் கொண்டனர்.
93 ஆயிரத்து 403 2ஆம் டோசைப் போட்டு முடித்தனர்.
SUHAKAM வரவேற்பு!
12 முதல் 17 வயது வரையிலான பிள்ளைகளுக்கு Pfizer தடுப்பூசி செலுத்த அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதியை, மலேசிய மனித உரிமை ஆணையம் SUHAKAM வரவேற்றிருக்கின்றது.
இந்நடவடிக்கை, பிள்ளைகளை கொரோனா பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்க அரசாங்கம் எடுத்துள்ள அக்கறையையும், கடப்பாட்டையும் காட்டுவதாக, SUHAKAMமின் சிறார் பிரிவுக்கான ஆணையர் அறிக்கை வழி கூறியிருக்கின்றார்.
அரசாங்கத்தின் இம்முயற்சிக்கு தோள் கொடுக்கும் விதமாக, பெற்றோர்கள், 12 வயதுக்கு மேற்பட்ட தங்களது பிள்ளைகளை தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஆகக் கடைசியாக நாட்டில் 84 பேர் கொரோனாத் தொற்றுக்கு பலியாகினர்.
அவர்களில் இருவர் மிக இள வயதினர்.
ஒருவருக்கு வயது 16; மற்றொருவர், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த 8 வயது பிள்ளை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சுவாசக் கவசம் அணிவதில் அலட்சியம்!
இந்தியாவை மூன்றாம் கட்ட கொரோனா அலை தாக்கலாம் என்ற எச்சரிக்கையையும் மீறி பொது மக்களில் பலர், இன்னமும் சுவாசக் கவசம் அணிவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர்!
ஏறக்குறைய 312 மாவட்டங்களில், 33 ஆயிரத்திற்கும் அதிகமானோரிடம் இணையம் வழி நடத்தப்பட்ட ஆய்வில், தங்களது பகுதி மக்களிடையே சுவாசக் கவசம் அணிவதற்கான முக்கியத்துசம் குறைந்துள்ளதாக, சுமார் 67 விழுக்காட்டினர் பதில் அளித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி மையங்களில் கூட, மக்கள் சுவாசக் கவசம் அணியும் விதிமுறையை சரிவரப் பின்பற்றுவதில்லை என்றும் அவர்களில் பலர் புகார் கூறியுள்ளனர்.
இதனால், தடுப்பூசி மையங்களுக்குச் சென்று வந்த தங்களது குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு, அடுத்த சில நாட்களிலேயே COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களை அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.
சுவாசக் கவசம் இன்றி இருவர் நேரில் சந்தித்துக் கொள்ளும் போது, கொரோனா தொற்றுவதற்கான வாய்ப்பு 90 விழுக்காடு வரை இருக்கின்றது.
அதுவே கொரோனா தொற்று உள்ள ஒருவர், சுவாசக் கவசம் அணிந்துள்ள ஒருவரை சந்திக்கும் போது, அவருக்கு அத்தொத்ற்று ஏற்படும் வாய்ப்பு 30 விழுக்காடு குறைவாக இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஜப்பானிய சக்ரவர்த்தி அச்சம்!
அடுத்த மாத Tokyo ஒலிம்பிக் போட்டியின் போது கொரோனா வைரஸ் பரவல் மோசமாகலாம் என ஜப்பானிய சக்ரவர்த்தி அச்சம் தெரிவித்துள்ளார்!
பெருந்தொற்றுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டியை நடத்த தான் வேண்டுமா என ஜப்பானியர்கள் மத்தியில் விவாதம் நீடிக்கும் நிலையில், மக்களின் கருத்துடன் ஒத்துப் போவது போல் அரண்மனையின் அறிக்கை அமைந்திருப்பது ஆச்சரியத்தையும், அரசுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் Covid19 சீற்றம் குறித்து சக்ரவர்த்தி Naruhito ஆழ்ந்த கவலைக் கொள்வதாக அவ்வறிக்கை கூறினாலும், Tokyo ஒலிம்பிக் போட்டி திரும்பவும் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்றோ, அல்லது ஒரேடியாக ரத்துச் செய்யப்பட வேண்டும் என்றோ அவர் எங்கும் குறிப்பிடவில்லை.
ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜூலையில் தொடங்கினால் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொடும் என ஜப்பானிய மக்களில் 86 விழுக்காட்டினர் ஐயுறுவதாக அண்மைய ஆய்வொன்றின் முடிவு கூறுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather